Monday, 19 October 2026

இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக மித்ரா நிதி உயர்வுடன் பன்முக சிறப்புத் திட்டங்கள்: அமைச்சர் ரமணன்

புத்ராஜாயா, அக்டோபர் 17 - 
2027 மடானி வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவின் (மித்ரா) நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இந்திய இளைஞர்களுக்கு உயர் தொழில்நுட்ப திறன் பயிற்சிகள் உட்பட தரமான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் இந்திய சமூகம் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் மடானி அரசாங்கம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நிதி அதிகரிப்பு காட்டுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொழில்துறை ஆட்டோமேஷன், தொழில்நுட்பம் - விமானப் பராமரிப்பு போன்ற உத்திப்பூர்வத் துறைகளில் இந்திய இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் அவர்கள் அதிக வருமானம் ஈட்டும் வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

"மித்ரா நிதியை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியிருப்பது, இந்திய இளைஞர்களுக்கு உயர் திறன் துறைகளில் பயிற்சியும் வேலைவாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும். இளைஞர்களின் வருமான நிலையை உயர்த்த இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும்," என்று குறைந்தபட்ச ஊதிய உத்தரவு, 2027 வரவு செலவுத் திட்ட அறிவிப்புகள் குறித்து இன்று பெர்கேசோ தலைமையகக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

மித்ரா ஒதுக்கீட்டைத் தவிர, இந்திய சமூகத்தின் தொழில்முனைவோர், கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விரிவான ஆதரவுத் திட்டங்களும் 2027 வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்று டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

குறு-சிறு தொழில் துறையை வலுப்படுத்தும் வகையில், தெக்கூன் நேஷனல்,  அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) மூலம் 150 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய தொழில்முனைவோர் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும், குடும்ப பொருளாதார நிலையை உயர்த்தவும் உதவும்.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, மோசமான உள்கட்டமைப்புகளைக் கொண்ட தமிழ்ப் பள்ளிகளைப் பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கற்றலுக்கு உகந்த சூழல் உருவாக்கப்படும்.

"அடுத்த தலைமுறைக்கான கல்வி வசதிகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜொகூர், குளுவாங்கில் உள்ள பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புதிய முழுமையான கட்டடம் கட்டப்படும் என்றும் மடானி அரசாங்கம் அறிவித்துள்ளது," என்று அவர் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கம், பொருளாதார வளர்ச்சியோடு நாட்டின் இந்திய சமூகத்தின் நலனையும் சமமாகப் பேணி வருவதை இந்த அனைத்து முன்னெடுப்புகளும் தெளிவுபடுத்துகின்றன என்று அமைச்சர் வலியுறுத்தினார்.admin@sabtham'stv